அழிந்துவரும் கிராமிய விளையாட்டுகளும் பண்பாட்டுச் சவால்களும்

  Sep 28th, 2019, 1097 Readers

விளையாட்டு என்ற கலை ஒவ்வொரு சமூகத்திலும் இயல்பாக அமைந்துள்ளது. இது சமூகத்துக்குச் சமூகம்

வேறுபாடுகளையும் வித்தியாசமான பயன்பாடுகளையும் கொண்டு விளங்கும். இந்த விளையாட்டுகள் அந்தந்தச்

சமூகத்தின் மனவெழுச்சி, அறிவு, பண்பாட்டு நிலை, இயற்கைச் சூழல் இவற்றுக்கேற்பக் கட்டமைக்கப்

பெற்றுள்ளன.

விலங்குகள் போல் திரிந்த நிலை, வேட்டையாடிய நிலை, நாடோடி நிலை, கால்நடைகள் மேய்த்த நிலை, உழவு

நிலை முதலியனவாக மக்களது பண்பாடு படிப்படியாக உயர்ந்து வந்துள்ளது. இவையே விளையாட்டில்

மிளிர்கின்றன என்பார் ஸ்டான்லி ஹால். விளையாட்டால் ஒருவருக்கு உடலுரம், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு,

மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன என்கிறார் பாவாணர்.

விளையாட்டு என்பது மனிதனுக்கு ஓர் உடல் சார்ந்த தேவை. அன்று அறுவடை முடிந்த வயல்வெளி, மேய்ச்சல்

நிலம் போன்றவை விளையாட்டுக்களமாக விளங்கினாலும், பெரும்பாலும் தெருக்கள்தாம் விளையாட்டிடமாக

இருந்தன. கிராமிய விளையாட்டுகளைக் கூர்ந்து நோக்கும் போது நம் சமூகக் கட்டமைப்புக்கு உட்பட்டும்,

செய்யும் தொழில், உழைப்பின் தன்மை, வாழும் பகுதியின் தட்ப வெட்ப நிலை, மொழி, கலாச்சாரம், ஓய்வு நேரம்

ஆகியவற்றைச் சார்ந்து உருவாகி வளர்ந்தன என்பது புலனாகும். இந்த நிலைப்பாடு உலாகளாவிய

விளையாட்டுகளுக்கு இல்லை.

உலாகளாவிய விளையாட்டுகள், ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் தோற்றம் பெற்றிருந்தாலும் இன்று,

பண்பாடுகளின் கட்டமைப்பிலிருந்து வெளிக்கொண்டு வரப்பட்டு பொதுவாக்கப்பட்டுள்ளது. இந்த

விளையாட்டுகள் மனிதனுக்கு உடல், அறிவு தொடர்பான பயன்பாட்டிற்கு உதவுமே தவிர உணர்வு சார்ந்த

மனவெழுச்சி நிலைக்குப் பயன்படாது. ஆனால் கிராமிய விளையாட்டுகளுக்குச் சமூகம் சார்ந்த, இலக்கியம்,

கலை இவற்றோடு நெருக்கம் அதிகமாகவே அமைந்திருக்கும்.

தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து வசதிகளின் அதிநவீன வளர்ச்சி காரணமாக நமது

சமூகங்களுக்கிடையே பண்பாட்டுக் கலப்புகள் பல தளங்களில் நிகழ்ந்து வருகின்றன. மனிதனை ஆட்கொள்கிற

இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் நமது பண்பாட்டுக் கூறுகளில் மாறுபாட்டை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

வணிகம், படையெடுப்புகள், மதமாற்றங்கள் மூலமாக ஒரு சமூகத்தவரது பண்பாட்டு கூறுகள் இன்னொரு

சமூகத்தவரது பண்பாட்டுக் கூறுகளோடு கலந்திருக்கவும் வாய்ப்புண்டு.

இதன் விளைவாகச் சிலவற்றைப் பண்பாட்டுக் கட்டமைப்புக்கு அப்பால் சென்று மனிதன் பெற்றுக் கொள்கிறான்.

இந்தத் தன்மை விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவாக உலகளாவிய

விளையாட்டுகள் பண்பாடு சார்ந்த, வட்டாரம் சார்ந்த விளையாட்டுகளோடு கலந்துவிடுகின்றன அல்லது

அவைகளை ஆக்கிரமித்து விடுகின்றன. இதனால் சொந்த மண்ணின் பண்பாடு சார்ந்த கிராமிய விளையாட்டுகள்

அழிந்து வரும் அபாயத்தில் உள்ளன. கிராமிய விளையாட்டுகளின் இடத்தை உலகளாவிய விளையாட்டுகள்

பிடித்துக் கொள்வதால் இங்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பண்பாட்டு அடிப்படையிலான மாற்றங்கள்

வலுவானவை.

கிராமிய விளையாட்டுகள் இயற்கையோடு இயைவன. வீரம், உறுதி, ஊக்கம், உழைப்பு, நட்பு, இரக்கம், நேர்மை,

அறம் என்னும் உயர்ந்த பண்புகள் மனிதர் உள்ளங்களில் கிராமிய விளையாட்டுகள் வழியாகவே

வளர்க்கப்பட்டன. இதன் விளைவாகவே சடுகுடு விளையாட்டில் நாட்டுப்புற பாடல்கள் பயன்படுத்தப்படுவதும்,

களியல் ஆட்டத்தில் பாடல் முறை பின்பற்றப்படுவதும், இவ்விளையாட்டுகளின் தோற்றுவாய்க்குப் பழம் தமிழ்

மரபு சார்ந்த காரண காரியங்களைச் சொல்ல முடிவதும் இயலுகின்றது.

சிறுவர்களுக்கும், இளையோருக்கும், பெரியவர்களுக்கும் நல்ல பொழுது போக்காகவும், உடற்பயிற்சியாகவும்,

கலை ஆசானாகவும், உளவியல் மருத்துவராகவும், வாழ்வு மதிப்பீடுகளை பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும்

இருந்த இந்த விளையாட்டுகள் இப்பொழுது அருகி விட்டன.

ஒரு காலத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை உடற்பயிற்சிக்குப் பயன்படுத்திய விளையாட்டுகள் தான்

ஏராளம். இவ்விளையாட்டுகள் உடலுக்குப் பயிற்சியைத் தருவதோடல்லாமல் மனதுக்குப் புத்துணர்ச்சியையும்

கொடுத்தன. மாலையில் களைக்கக் களைக்கப் பல விளையாட்டுகளை விளையாடிய பிறகு குளித்துவிட்டுப்

படிக்க அமரும் போது மனதும் உடலும் அதற்கு ஈடுகொடுக்கும். இன்று காலம் மாறிவிட்டது. பள்ளியிலிருந்து

வந்துவிட்டால் உடனே டியூசன் போக வேண்டும். விளையாட நேரமில்லை. அப்படிக் கிடைக்கும் சிறிது

நேரத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் அபகரித்து விடுகின்றன.

கிராமிய விளையாட்டுகள் அழிந்து வருவதால் இன்று பண்பாட்டின் மூலங்களுள் ஒன்றான மொழி

விளையாட்டுகளில் பயன்படுத்தப்படுவது குறைக்கப்பட்டுள்ளது. விளையாட்டின் போது அணியப்படும்

ஆடைகளó வித்தியாசப் படுகின்றன. இதனால், கிராமிய விளையாட்டுகளைத் தவிர்த்து உலகளாவிய

விளையாட்டுகளை விளையாடுவதை உயர்வானதாகக் கருதும் நிலை உருவாகிறது. எந்த நிலையிலும் கிராமிய

விளையாட்டுகள் குறிப்பிட்ட பண்பாட்டோடு பெற்றுள்ள உறவு நிலையை, நெருக்கத்தை உலகளாவிய

விளையாட்டுக்களால் தரமுடியாது.

மேற்சொன்ன சிக்கலைத் தீர்க்க இன்று கல்வி, அரசு, சமுதாயம், ஊடகம் போன்றவை உதவ வேண்டும். ஆனால்

அவைகள் உலகளாவிய விளையாட்டுக்களை வளர்ப்பதிலும், அவற்றை எப்படி நம் பண்பாட்டிற்கு உகந்த

விளையாட்டு ஆக்குவது என்பதிலும்தான் கவனமாக இருக்கின்றன. கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை

பாடமாக்கப் பட்டுள்ளதுடன், நம் பண்பாடு சார்ந்த விளையாட்டுப் போல் கிரிக்கெட்டை நம் சமூகத்துக்கு மிக

நெருக்கமான, உறவுடைய ஒன்றாகக் காட்டும் முயற்சியும் கல்வித் திட்டத்தில் அமைந்துள்ளது. இதனால் நம்

சமூகத்தில் உலகளாவிய விளையாட்டின் நுழைவு இலகுவாகõ விடுகிறது.

இன்று தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் இந்த உலகளாவிய விளையாட்டுகளைக் கவர்ச்சிகரமாகக் காட்டி

வருவதால், அதில் நடைபெறும் அரசியல் விளையாட்டுகளையோ மோசடிகளையோ ஊழல்

கேவலங்களையோ உணராமல் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்கள் விளையாடும் நிலை

மறந்து சோம்பிக் கிடக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கம் விரும்பிச் செய்யும் விஷயங்களை ஒட்டுமொத்த மக்களும் பின்பற்ற வேண்டும் என்கிற

ஒரு கோட்பாடு மறைமுகமாகப் புகுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இத்தகைய ஊடுருவல்

விளையாட்டுத் துறையையும் விட்டு வைக்கவில்லை. இதன் எதிரொலியாகத்தான் இன்று கிரிக்கெட் உள்ளிட்ட

நவீன விளையாட்டுகள் நம் சமூகத்தில் அரசு, கல்வித்துறை, ஊடகங்கள் வழியாகப் புகுத்தப்படுகின்றன. இதன்

தாக்கத்தால் சமூகம் சார்ந்த விளையாட்டு மன்றங்கள் கூட இந்தச் சூழலுக்கு ஆட்பட வேண்டிய நிர்ப்பந்த

நிலையில் உள்ளன.

ஒவ்வொரு தனி மனிதனையும் அவனவனுடைய பண்பாட்டோடுத் தொடர்புடையவனாக ஆக்கப் பட

வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். பண்பாட்டிலிருந்து விலகி வாழும் மனிதன் தன் முழுமையான

ஆளுமையை இழந்து விடுகிறான். பழமை மிக்க தமிழ் போன்ற பண்பாடுகளில் இந்த உலகளாவிய

விளையாட்டுகளின் தாக்கம் மிக மோசமான விளைவுகளை உருவாக்கும். எனவே பண்பாட்டுத் தொடர்புடைய

கிராமிய விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டும். அல்லது இவ்விளையாட்டுக்களை நவீன காலத்துக்கேற்ப

மாற்றங்களைச் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்கு அரசு, கல்வி நிறுவனம், ஊடகம், சமுதாயம் ஆகியவை

முன் வரவேண்டும்.

தகவல் தொடர்புச் சாதனங்களின் பிரமாண்டமான வளர்ச்சியும், உலக அளவிலான விளையாட்டுப்போட்டிகளின்

அதிகரிப்பும், நடத்துபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தின் கவர்ச்சியும்,

வேலைவாய்ப்புக்கான அதிகச் சாத்தியகூறுகளும் இளைஞர்களை உலகளாவிய விளையாட்டுகளை நோக்கி

கவர்ந்து இழுப்பதால் பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்பு கிட்டத்தட்ட நின்றுபோய்விட்டது.

இந்தியா அடிமைப்பட்டிருந்த காலத்தில் இங்கே தங்கியிருந்த ஆங்கில அதிகாரிகளும், இராணுவ வீரர்களும்

தங்களது நாட்டு விளையாட்டுகளை இங்கேயும் விளையாடத் துவங்கினர். ஹாக்கி, கிரிக்கெட், கோல்ப் போன்ற

விளையாட்டுகள் அவை. ஆங்கிலேய ராணுவ வீரர்களின் முக்கிய விளையாட்டாக இருந்தது ஹாக்கியை

விளையாட இந்தியர்களை அனுமதிக்கவில்லை. காலப்போக்கில் ஆங்கில ராணுவத்தில் பணியாற்றிய இந்திய

வீரர்களையும் தங்களோடு ஹாக்கி விளையாடச் சேர்த்துக் கொண்டனர்.

ராணுவ வீரர்கள் ஏழை விவசாயக் குடும்பங்களிலிருந்தும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர குடும்பங்களிலிருந்தும்

வருகிறவர்கள். அவ்வகையில் அது ஒரு அடித்தட்டு மக்கள் பிரிவினர் விளையாடும் விளையாட்டாக

அமைந்தது.. போர்க்குணமிக்க இப்பிரிவினர் விளையாடியதால் ஹாக்கியில் இந்தியா குறிப்பிடத்தக்க

முன்னேற்றத்தைப்பெற்றது. இவ்விளையாட்டு நம்மூர் மாங்கொட்டையடித்தல் விளையாட்டின் மறு

வடிவமாகும்.

கிரிக்கட், கோல்ப் போன்றவற்றைப் பெரும் தலைவர்களும், உயர் அதிகாரிகளுமான ஆங்கிலேயாóகள்தான்

இந்தியாவில் முதலில் ஆடத்துவங்கினர். சிறிது காலங்களுக்குப் பின்னால் இந்தியாவில் இருந்த

மன்னர்களையும், இளவரசர்களையும் விளையாட அனுமதித்தனர். எனவே இது ஒரு ஆளும் வர்க்க

விளையாட்டாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்நிலை தொடர்ந்து, கிரிக்கெட் நீண்டகாலம்

நகர்ப்புறத்தைச் சார்ந்தவர் விளையாட்டாகவே இருந்தது.

ஐந்து நாட்கள் ஆடும் ஒரு உதவாத விளையாட்டாகவே பெரும்பான்மையான மக்கள் இதைக் கருதினர்.

அண்மைக் காலத்தில் இதை ஒரு நாள் போட்டியாக நடத்தத் துவங்கி, தொலைக்காட்சிகள் இவ்விளையாட்டைக்

காட்டத் தொடங்கிய போதுதான் இதனுடைய கவர்ச்சி அதிகரித்தது. பன்னாட்டுக் கம்பனிகள் தங்களது

வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கங்களுகóகாக இவ்விளையாட்டைப் பயன்படுத்தத் துவங்கின. இதற்காகக்

கோடிக்கணக்கானப் பணத்தைச் செலவு செய்தனர். விளையாட்டு வீரர்களை உயர்ந்த விலை கொடுத்து வாங்கி,

அவர்களைத் தங்களது விளம்பரப் பலகைகளாகப் பயன்படுத்தியதால் கோடிக்கணக்கான பணம் புழங்கும் ஒரு

விளையாட்டாக இது மாறியது.

பணவெறி பிடித்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, கோடீஸ்வரர் ஆக்க வேண்டுமென்ற சுயநல

எண்ணத்தோடு கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளில் வலிந்து ஈடுபடுத்தி வருகின்றனர். இங்கே

விளையாட்டின் நோக்கம் வீணாகி விடுவதோடு, விளையாட்டு ஒரு தொழிலாகவும் மாறிவிட்டது. இதனால்

மனமகிழ்ச்சி, திருப்தி, அறிவாற்றல், வாழ்வியல், உடல்நலம், கலை போன்ற அம்சங்கள் காணாமல்

போய்விட்டன.

பண்பாட்டுச் சீரழிவுக்கு விளையாட்டுகளைப் பன்னாட்டு அமைபóபுகளும், ஆளும் வர்க்கமும்

பயன்படுத்துகின்றன. பண்பாட்டைச் சீரழிக்கும், உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் பொருட்களை விளம்பரம்

செய்வதற்கு விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். கோகோ þ கோலா, பெப்ஸி போன்ற விஷ

மயமான பானங்கள், சிகரெட், மதுவகைகள் போன்றவற்றைத் தயாரிக்கும் கம்பெனிகள் தான் இன்று கிரிக்கெட்

போட்டிகளை ஒளிபரப்பு செய்கின்றன. விளையாட்டு வீரர்கள் இவற்றைப் பயன்படுத்தி விளம்பரங்களில்

நடிப்பதால் அவர்களை விரும்பும் ரசிகர்களும் இந்தப் பழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர்.

கோகோ கோலா, பெப்ஸி போன்ற பானங்களில் விஷமயமான ரசாயனப் பொருட்கள் இருப்பதை விஞ்ஞான

ஆய்வுகள் உறுதி செய்தபோது நாடு முழுவதும் இப்பானங்களைப் பருகுவதற்கும், விற்பதற்கும் பல்வேறு

அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இவைகளின் விற்பனைக் கணிசமாகக் குறைந்தது. இதை மாற்றுவதற்காக

இக்கம்பெனிகள் கிரிக்கெட் வீரர்களைப் பயன்படுத்தின. இப்பானங்கள் பருகுவது சிறந்ததென தொலைக்

காட்சிகளில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் தோன்றிக் கூறியபோது இவற்றின் விற்பனை மீண்டும் அதிகரித்தது.

பண்பாடு சார்ந்த கிராமிய விளையாட்டுகள் அழிவதற்கு நமது தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணமாகும்.

மேற்கத்திய மக்கள் உயர்வானவர்கள், அவர்களது விûயாட்டுகள் உயர்ந்தவை என்கிற மனோநிலை நமது

மக்களிடமிருந்து மாற வேண்டும். இன்று கிராமப்புற விளையாட்டுகளை ஊக்குவிப்பாரும் இல்லை.

குக்கிராமங்களில் கூட பெரும்பாலான விளையாட்டுகள் அழிந்துவிட்டன. புதிய தலைமுறைக்கு இப் பண்பாடு

சார்ந்த விளையாட்டுகள் தெரியவில்லை. குழந்தைகள் திட்டமிட்டுச் சூதாடப்படுகிறார்கள். இவற்றைப்

பாதுகாக்க ஒரு பண்பாட்டுப் பேரெழுச்சி தேவைப்படுகிறது.

பண்பாட்டுப் பேரெழுச்சி என்பது ஒரு குறுகிய இனவாதமோ, வெறித்தன்மையோ கொணóடதாக இருத்தல்

ஆகாது. பண்பாட்டின் சிறந்த அம்சங்களைப் பாதுகாப்பதும், அவற்றைப் பலப்படுத்துவதும், நிறைவான

மனமகிழ்ச்சியைத் தருகின்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு இளைஞர்களை ஊக்குவிப்பதுமாகும்.

உலக அளவிலான விளையாட்டுகளை முழுமையாக ஒதுக்க இயலாது என்பதும் ஓரளவு உண்மைதான். ஆனால்

அதற்காக நமது மூதாதையர் உருவாக்கிய பண்பாடு சார்ந்த கிராமிய விளையாட்டுகளை மறந்துவிட வேண்டிய

அவசியம் இல்லை. இது பெற்ற தாயை கொன்று மறைப்பது போன்றதாகும்.

ஏழைப் பெண்கள் பாண்டி ஆடினர். மன்னர் குலப் பெண்கள் பந்து விளையாடினர். உழைக்கும் ஏழைகள்

சிலம்பமும், சடுகுடுவும் விளையாடிக் கொண்டிருந்த போது ஆள்வோர் சதுரங்கமும், குதிரைப் பயிற்சியும்

செய்து கொண்டிருந்தனர். வில்வித்தை கற்றதற்காக ஏகலைவன் விரலை இழந்த வரலாறு அனைவருக்கும்

தெரியும். இன்று, அன்னியர் விளையாட்டுகளை ஆள்வோர் பாதுகாக்கின்றனர். அடித்தட்டு மக்களின்

விளையாட்டுகளை ஆள்வோரும் ஒதுக்கிவிடுகின்றனர். குதிரை சவாரி, வில்வித்தை, வாட்போர் போன்ற

விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெறுகின்றன. சதுரங்கம் சர்வதேச விளையாட்டாக மாறியது. ஆனால்

அடித்தட்டு மக்களின் விளையாட்டுகளான சிலம்பமும், களரியும், சடுகுடுவும் எவருக்கும் விளையாட

விருப்பமில்லாமலும் விளையாடத் தெரியாமலும் போய்விட்டன.

அடித்தட்டு மக்களின் விளையாட்டுகளைப் பாதுகாக்கக் கிராமப்புற இளைஞர்களுக்கு உணர்வூட்ட வேண்டும்.

பண்பாடு சார்ந்த கிராமிய விளையாட்டுப் போட்டிகளை அவ்வப்போது நடத்த முயற்சி எடுத்தல் வேண்டும்.

விளையாட்டுக் கழகங்கள் நம் பண்பாடு சார்ந்த விளையாட்டுகளிலேயே போட்டிகளை நடத்த முன்வர

வேண்டும். அரசு உலகளாவிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர்த்து பண்பாடு சார்ந்த

விளையாட்டுகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அப்போதுதான் தனது சொந்த தேசத்தை நேசிக்கின்ற

இளையதலைமுறையை உருவாக்க முடியும். இல்லையென்றால் இந்தியாவில் இருந்து கொண்டு பிறநாட்டை

நேசிப்பவனாகவும், இந்த நாட்டு ரகசியங்களை அன்னிய நாட்டுக்கு விற்பவனாகவும்தான் இருப்பான்.

நமது பண்பாட்டின் இரத்த ஓட்டமாகிய கிராமிய விளையாட்டுகள், நமது சொத்து. இந்தப் புதையலை மிகவும்

சிரமப்பட்டு தேடிக்கண்டு பிடித்து தூசு தட்டி, அவற்றின் தன்மைகள் மாறாமல் வாழ்வியல், அறநெறி, அறிவுத்

திறன், உடற்பயிற்சி, பொழுது போக்கு, கலைவடிவும் என ஆறு பகுதிகளாகப் பிரித்து, இன்றைய

தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் பயன்படும் சொத்தாக குலைகுலையா முந்திரிக்கா என்ற நூலாகத்

வெளிவந்துள்ளது. 114 விளையாட்டுகள் விளையாடும் முறையோடு கிடைத்துள்ளன. சங்கஇலக்கியத்தில்

ஆய்வுசெய்து இந்த விளையாட்டுகளில் சுமார் நாற்பது விளையாட்டுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு

முற்பட்ட தொன்மை கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளின் இழப்பால் ஏற்பட்டுள்ள

பண்பாட்டு மாற்றத்தையும் பதிவு செய்துள்ளேன்.

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் எந்த கிராமத்தில் பார்த்தாலும் மாலையில் குழந்தைகள் இளைஞர்கள்

அனைவரும் விளையாடுவார்கள். இன்றைக்கு கிராமங்களில் மைதானங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

குடும்பம் ஒட்டு மொத்தமாக சினிமா சீரியல்களில் மூழ்கிப்போய்க் கிடக்கிறது.

இன்றைய தொடர்புச் சாதனங்கள் நமது பண்பாட்டையும், பாரம்பரிய விளையாட்டுகளையும், கலைகளையும்

சீரழித்து, நமது வாழ்விலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக் காட்சிகள் லாபம்

சம்பாதிக்கும் எண்ணம் தவிர்த்து தாய்நாட்டுப் பற்றோடு நம் மண் சார்ந்த விளையாட்டுகளை

ஒளிபரப்பவேண்டும். கல்வித்துறை மாணவர்களுக்கான உடற்கல்விப் பாடத் திட்டத்தில் நம் மரபு சார்ந்த

விளையாட்டுகளை அறிமுகப்படுத்திப் பயிற்சியளிக்கப் வேண்டும். அப்போது கிராமிய விளையாட்டுகளை

இன்னும் புத்தெழுச்சியோடு உலாவரச் செய்யலாம்.

முகவரி

குமரி ஆதவன், குமாரபுரம் அஞ்சல் - 629 164

குமரி மாவட்டம். அலைபேசி- 9442303783

Kumariaathavan1970@gmail.com

kumariathavan villagegames