Sunday Sermon In Tamil | ஞாயிறு மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 14 ம் ஞாயிறு (04/07/202) | By Rev. Fr Martin M

  Jul 4th, 2020, 1111 Readers

இன்றைய இறை சிந்தனை

05/07/2020 | ஞாயிறு

செக்கரியா: 9: 9-10 உரோ:8: 9, 11-13, மத்:11: 25-30

இறை இயேசுவின் அன்பர்களே!

இன்று திருஅவை பொதுக்காலம் 14 - ம் ஞாயிறு சிறப்பிக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் வருங்கால அரசர், எளிமையுள்ளவர், நீதியுள்ளவர், அமைதியை அறிவிப்பவர் என்று மெசியாவை பற்றி குறிப்பிடுகிறது. அவர் வன்முறையை இல்லாமல் செய்கிறவர். எனவே தேர்ப்படை இருக்காது, குதிரைப்படை ஒழிந்துபோகும். வில் ஒடிந்து போகும். அமைதி மட்டுமே நிலைபெறும்.

அமைதியின் அரசராக அவர் இருப்பார் என செக்கரியா முன்னறிவிக்கிறார். இந்த உலகில் எல்லா அரசும் பிற நாடுகளுடன் மோதல் வருகிற போது நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்பார்கள். ஆனால் எல்லா அரசும் ஆயுதக் குவிப்பில் ஈடுபடுவதும் எதார்த்தம். அமைதிப் பேச்சில் மட்டும் இருக்கும் செயலிலே படைபல அதிகரிப்பு காணப்படும். ஆனால் வரவிருக்கும் மெசியா அமைதியை அறிவிப்பவர். ஆயுதங்கள் இல்லாதவர். எனவே இந்த மெசியாவை பின்பற்றி வாழும் நாமும் அமைதியின் தூதுவர்களாய் மாறுவோம்!

இயேசு தன் சீடரை பார்த்து "நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும் இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக என முதலில் கூறுங்கள்" (லூக் 10 : 5) என்கிறார்.

மேலும் "அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்"

(மத் 5 : 9) என்கிறார். எனவே கிறிஸ்துவின் பிள்ளைகள் அமைதியை விரும்ப வேண்டும். வன்முறை அல்லது பழிக்குப்பழியை அல்ல. மன்னிப்பு இருக்கும் இடத்தில் அமைதி இருக்கும்.

இறங்கிச் செல்லும் மனநிலையில் அமைதி வளரும். பிறர் உணர்வுகளை மதிக்கும் மனிதரில் அமைதி தங்கும். பேச்சு வார்த்தை மீது நம்பிக்கை உள்ளவர்களால் அமைதி நிலைநிறுத்தப்படும். இல்லை என்றால் அமைதி பேச்சில் இருக்கும் செயலில் வராது.

அமைதியை விரும்புவோம்!

அமைதியாய் வாழ்வோம்!

அருட்பணி. M. மார்ட்டின்,

பங்குத்தந்தை, சூழால்.

தேனருவி மீடியா https://www.youtube.com/channel/UCxgfr5Dr8udb-VwAEdkXDTw

Subscribe பண்ணுங்க.