குடும்பங்களில் செய்தித் தொடர்பு - Fr. Maria William

  Nov 4th, 2019, 516 Readers

Rev. Fr. Maria William,

The Correspondent

St Xavier's Catholic college of Engineering

குடும்பங்களில் செய்தித் தொடர்பு

ஆளுக்கொரு பக்கம் அலைபேசியின் மீது தலையைக் கவிழ்த்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவர்களையே மறந்து இருக்கும் மனிதர்களும் தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கி கற்பனை உணர்ச்சிகளில் மூச்சுத் திணறி தன்னோடு வாழும் நிஜவாழ்வு மனிதர்களின் உணர்ச்சிகள் பற்றிய சுரணையே இன்றி வாழ்ந்திடும் குடும்ப உறுப்பினர்களும்; அதிகமாகிக் கொண்டிருக்கும் காலமிது.

அதற்கேற்ப குடும்பங்களில் விரிசல்களும் கணவர் மனைவியர் மத்தியில் பிரச்சனைகளும் மணமுறிவுகளும் அதிகமான வண்;ணம் உள்ளன. குழந்தைகள் ஒரு புறத்தில் அவர்களின் தேவைகள் பற்றிய புரிதலோ அல்லது பொறுமையோ இன்றி துன்புறுத்தப்படுகின்றனர் மறுபுறத்தில் போதிய கவனிப்பும் வழக்காட்டுதலும் இன்றி குடும்பத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடங்களை ஊடகங்களிலிருந்தும் தவறான தோழமைகளிலிருந்தும் கற்றுக்கொண்டு வழிதவறிச் செல்லும் நிலையில் உள்ளனர்.

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நேரடியான, உண்மையான ஆழமான உரையாடல் இல்லாதிருப்பது இப்பிரச்சினைகளுக்கு முக்கியமான ஒரு காரணம் என்பதில் ஐயமில்லை. குடும்ப உறுப்பினர்கள். ஒன்று சேர்ந்து பேசி சிரித்து விளையாடி மகிழ்ந்திருந்த நிலை போய் அவரவர் உலகுக்குள் மூழ்கி தனிமைப்பட்டிருக்கும் நிலை உண்மையில் பல குடும்பங்களைப் பீடித்திருக்கும் பெரும் நோய் என்றே சொல்லலாம். உளவியல் வல்லுநர்கள் நலமானக் குடும்பங்;;களின் குணங்களைக் குறிப்பிடும் போது முதல் குணமாக குடும்ப உறுப்பினாக்ள் மத்தியில் இருக்கும் நலமானச் செய்தித் தொடர்பினையே குறிப்பிடுகின்றனர்.

செய்தித் தொடர்பின் தேவையும் பயன்களும்:-

தம்மை வெளிப்படுத்துவது நம் இயல்பு நம் வாழ்வின் அடிப்டை தேவை. மூச்சு விடுதல் போல நம் சுயவெளிப்பாட்டின் முதல் தளம் நமது குடும்பம் தான். நம் தேவைகள், மன ஓட்டங்கள், ஆசைகள் கரிசனைகள் நம் மகிழ்ச்சி, கோபம், கவலை, அச்சம் என அனைத்தையும் நம் குடும்பத்தினரிடம் தான் வெளிப்படுத்துகிறோம். அவ்வாறு நம்மை வெளிப்படுத்தவும், அவைகளுக்குத் தீர்ப்பிடும் மனநிலையின்றி செவிமடுக்கவும் பதில் தரவும் குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் நலமானச் செய்தித் தொடர்பு நம் வாழ்வின் மிக்ப்பெரும் கொடை.

உண்மையில் உறவுகளும் உறவின் தன்மைகளும் செய்தித் தொடர்புகளால் கட்டுமானம் செய்யப்படுபவை தாம். நம் செய்தித்தொடர்புகளின் தன்மைக்கேற்ப நம் உறவுகளின் தன்மை அமைகிறது. நம் உறவுகளின் தன்மைக்கேற்ப நம் வாழ்வின் தன்மையும் அமைகிறது என்பதில் ஐயமில்லை. எனவே நலமானச் செய்தித் தொடர்புகளே சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் வழியாகவும் அமைகிறது.

குடும்ப உறுப்பினர்களிடையே இருக்கும் செய்தித்தொடர்பின் முதல் பயனே நம்மை அறிந்துகொள்வது தான். நம் இயல்பானப் பண்புகளையும், நம் முக்கியத்துவத்தையும் நம் குடும்ப உறுப்பினர்களோடு உள்ள உறவில் தான் புரிந்துக்கொள்கிறோம். ஒருவர் தனது தனித்தன்மைகளையும், தன்னிடம் இருக்கும் நலமானத் தன்மைகளையும், வளர்ச்சிக்குத் தடையானப் பண்புகளையும் தன் குடும்ப உறுப்பினர்களின் பாராட்டுதல் மற்றும் சுட்டிக்காட்டுதல்கள் வழியாகத் தான் அறிந்துகொள்கிறார். நம் செயல்களுக்கு நம்; குடும்ப உறுப்பினர்கள் சொல்லால் அல்லது உடல்மொழியால் தரும் எதிர்வினைகள் நம் ஆளுமையைக் கட்டுமானம் செய்யும் முக்கியக் காரணியாகிறது. எனவே தன்மதிப்பு, தன்னிலைத் தெளிவு போன்ற அடிப்படை வளர்ச்சி சாதனைகளுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கிடையே நிகழும் செய்தித்; தொடர்பே அடித்தளம்.

நம் குடும்பத்தில் நம்மோடு வாழும் நம் உறவினர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் தேவைகள் மற்றும் மனநிலைகளை அறிந்து, அவர்களின் சூழ்நிலையினைத் தெரிந்துகொண்டு அவர்களோடு பேசவும் பழகவும், அவர்களின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் நம் குடும்ப உறுபடப்பினர்களிடையே இருக்கும் நலமானச் செய்தித்தொடர்புகள் முக்கியமானவை.

எல்லாவற்றிற்கும் மேலாக, நலமானச் செய்திதொடர்பினால் தான் குடும்ப உறுப்பினர்களிடையே பாசத்தையும் அன்பையும் வளர்த்து அனுபவிக்க முடியும். நமது நெருக்கமானவர்களின் அன்பை அனுபவிக்கவும், அவர்கள் மீது நமக்கிருக்கும் அன்பினை வெளிப்படுத்தவும் பொருத்தமான சொற்கள், உடல்மொழி, மற்றும் செயல்பாடுகளைக் குடும்பத்தில் நடக்கும் செய்திதொடர்புகளிலிருந்தே கற்றுக்கொள்கிறோம்.

வாழ்வு பற்றிய அடிப்படைக் கல்வியும், நம் கலாச்சாரத்தின் அடிப்படை வேர்களையும் குடும்ப உரையாடல்களிலிருந்தே கற்றுக்கொள்கிறோம். எது உகந்தது, எது தவிர்;க்க வேண்டியது என்பதைக் கற்றுக்கொள்வதும் அடிப்படை அறநெறிகளைப் புரிந்துகொள்வதும் குடும்பங்களில் நடைபெறும் செய்திதொடர்பினால் தான்.

குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேற்றுமைகளோ அல்லது மனக்குறைகளோ இருக்கும் போது, உண்மையான மற்றும் தெளிவானச் செய்தித் தொடர்பினால் அவைகளை வெளிப்படுத்தவும், உரையாடவும் தீர்வு காணவும் உதவுகின்றது.

எல்லா குடும்பங்களிலும் உறுப்பினர்களிடையே பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உண்டு. நலமானக் குடும்பத்தினர் தமக்குள் இருக்கும் செய்திதொடர்பினால் எளிதாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் போதியச் செய்தித் தொடர்பு திறன் இல்லாதாவர்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்கின்றனர் அல்லது அமுக்கி வைத்துக்கொண்டு மனநோய்களை உருவாக்கிக் கொள்கின்றனர்.

நலமானச் செய்தித்தொடர்பு உடைய குடும்ப உறுப்பினர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை தொடர்பாக அதிக திருப்தியையும் மன நிறைவினையும் கொண்டுள்ளனர் என்பது ஆராய்சிசகளின் முடிவு. மார்க்மென் (1981) என்பவர்; எந்த அளவுக்கு தம்பதியர் தமக்குள் இரு;ககும் செய்தித்தொடர்பினை நேர்நோக்காகப் பார்க்கின்றனரோ அந்த அளவுக்கு தம் திருமண வாழ்வில் திருப்தியும் இருப்பதாகக் கூறுகின்றனர் என்ற ஆய்வு முடிவினை வெளியிட்டுள்ளார்.

நம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளால் நிறைந்துள்ளுது. சமூக வாழ்வு நமக்கு தரும் நெருக்கடிகள், மன அழுத்தங்கள் இவைகளிலிருந்து குணம்பெற, ஆற்று பெற்றிட குடும்பங்களே நமக்குப் புகலிடம். அங்கு நலமான செய்தித்தொடர்புகள் முக்கியமானவை.

என்ன தான் சாதித்திருந்தாலும், கல்வியில் உயர்ந்திருந்தாலும் சகமனிதர்களோடு இயல்பாகப் பேசி நலமான உறவுகளை வளர்க்கத் தெரியவில்லையெனில் வாழ்வில் மகிழ்ச்சி அற்றுப்போய்விடும் அல்லவா. அதற்கானச் செய்தித்தொடர்புத் திறன்களை வளர்த்துக் கொள்வது முக்கியமல்லவா?

செய்தி தொடர்பின் தன்மை:-

குடும்பத்;தில் செய்தித்தொடர்பு என்பது என்ன? குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கிடையே சொற்கள், உடல்மொழி மற்றும் செயல்பாடுகள் வழி செய்திகளைப் பரிமாறிக்கொள்வது தான். செய்தித்தொடர்பில் உடல்மொழி கிட்டதட்ட 55 விழுக்காடு பங்கினையும், நமது குரலின் தன்மை 38 விழுக்காடு பங்கினையும், நம் சொற்கள் 7 விழுக்காடு பங்;கினையும் ஆற்றுகின்றன என்னும் புள்ளிவிபரம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது தான். எனவே வாழ்மொழியைவிட உடல்மொழி எந்த அளவுக்கு முக்கியம் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

செய்தித்தொடர்பில் மூலக்கூறாக இருப்பவை, செய்தியைப் பெறுதலும், அதற்கேற்ப பதல் செய்தி தருவதும் ஆகும். மூன்றாவது அம்சம் செய்தியைச் சுமந்து செல்லும் ஊடகம் ஆகும். அதாவது வாழ்மொழி அல்லது உடல்மொழி மற்றும் ஊடகக் கருவிகள் இதில் அடங்கும்.

செய்தியைப் பெறுதலில் முக்கிய பங்கு வகிப்பது செவிமடுத்தல் மற்றும் கவனித்தல். இருகாதுகளும் ஒரு நாவும் இருப்பது, இரட்டிப்பு மடங்கு பிறர் தரும் செய்திகளுக்குச் செவிமடுக்க வேண்டும் என்பதை அடையாளப்படுத்தவே எனச் சொல்வர். இன்னும் ஒரு படி போய், மூளையில் நியூரான்கள் செய்தியைப் பெறுவதற்கென நூற்றுக்கணக்கான டெண்ட்ரைட்டுகளைக் கொண்டுள்ளன எனினும், செய்தி கொடுப்பதற்கென ஒரு ஆக்சோன் மட்டுமே கொண்டுள்ளன என அடையாள வகையில் சுட்டிக்காட்டுபவர்களும் உண்டு.

செவிமடுக்கும் போது முழுக்கவனத்தையும் செலுத்திச் செவிமடுப்பது முக்கியமானது. விடுக்கப்படும் வார்த்தைகள் மட்டுமன்றி, உடலின் மொழியையும், செய்தி விடுக்கப்படும் பின்னணியையும் கவனிக்க வேண்டும். குரலின் தன்மை, உடல் அசைவுகள், பார்வை, தோரணையாவையும் உற்றுக் கவனிக்கப்பட்டால் தான் உண்மையானச் செய்தியைக் கண்டுகொள்ள முடியும். ஏனென்றால், சொல்லப்படும் வார்த்தைக்கும் உடல்மொழிக்கும் முரண்பாடு இருக்கும் வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் வாழ்மொழி பொய்த்தாலும் உடல்மொழி பொய்ப்பதில்லை.

தரப்படும் செய்தியைப் பெறும் போது, அச்செய்தியை நாம் அப்படியே பெற்றுக்கொள்வதில்லை என்பதை நினைவில் நிறுத்துவதும் முக்கியமானது. ஏனென்றால், நமது நினைவில் இருக்கும் பழைய அனுபவங்கள், செய்தி விடுப்பவர் பற்றி நாம் கொண்டுள்ள நம்பிக்கைகள், செய்தி பெறும்போது நாம் இருக்கும் சூழல், நமது மனநிலை, உணர்ச்சிநிலை, நலநிலை, ஆற்றல் நிலை போன்ற பல அமசங்கள் செய்திபெறுதல் என்னும் நம் செயல்பாட்டின் மீது தாக்கம் செலுத்தலாம். அதற்கேற்ப இவைச் செய்தியின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளுதலைப் பாதிக்கலாம். உண்மைச் செய்தியை விட்டு மாற்றுச் செய்தியாகப் புரிந்துக்கொள்ளும் நிலையினை இவை ஏற்படுத்தலாம். எனவே கவனமாக இருப்பது முக்கியம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் செய்திவிடுத்தலில் கவனமாகவும் பொறுப்பாகவும் இருப்பது தேவை. நாம் பெற்ற செய்தியைச் சரியாக, பின்னணிகளோடு தெரிந்து புரிந்துகொள்வது தேவை. சரியான புரிதலுக்கு ஏற்ப, பொருத்தமான வகையில், சூழ்நிலைக்கு ஏற்ப வழங்குதல் நலமானச் செய்தித்தொடர்புக்கு முக்கியமானது.

பெற்ற செய்திக்குப் பதில் தரும் போது, எதிர்வினையாக நமது உணர்ச்சிகள், எண்ணங்கள், நினைவுகள், எதிர்பார்ப்புகள், திட்டங்கள், மனநிலைகள் யாவும் தாக்கம் தருகின்றன. நமக்குள் இவை தரும் தாக்கங்கள் பற்றிய விழிப்புணர்வோடு, நாம் கொடுக்கும் செய்தி அல்லது பதில் எத்தகைய விளைவினை அடுத்தவரில் உருவாக்கும் என்பது பற்றிய திறனாய்வோடு செய்தி விடுத்தல் நம் பொறுப்பாகும். நாம் எத்தகைய ஊடகத்தை அதாவது வாய்மொழி, உடல்மொழி அல்லது ஊடக்கருவிகளைப் பயன்படுத்துகிறோம் என்பதையும்; அவைகளில் ஆற்றல்கள் மற்றும் பலவீனங்களையும்; உணர்ந்திருத்தலும் செய்திவிடுதலில் முக்கியமானது.

செய்தித்தொடர்பின்; முக்கிய நோக்கம் நலமான உறவுகளை உருவாக்கி மேம்படுத்துவதாகும். அதற்கேற்ப நம் செய்திகளை மனதில் தயாரித்து பொருத்தமாக விடுத்தல் வேண்டும். செய்தித்தொடர்பினை அதன் நோக்கத்திற்கேற்ப இரு வகைகளாகப் பிரிக்கின்றனர். 1. செயல்நிறைவேற்றித்திற்காக (iளெவசரஅநவெயட). 2. உணர்ச்சிகளைப் பகிர்தலுக்காக (யககநஉவiஎந).

காரியம் நடப்பதற்காக அல்லது நாம் செயல்படும் நோக்கம் நிறைவேறுவதற்காக சாதாரணமாக அறிவியல் உண்மைகளை, வேண்டுதல்களை, கட்டளைகளை, வழிகாட்டுதல்களைக் கொடுக்கிறோம். இவை எப்போதும் நடந்துகொண்டிருப்பவை தான். இவைகளில் அதிகமாக நம் தனிப்பட்ட உணர்ச்சிகிள் தொடர்புபடாது மேலோட்டமாகவே அமைந்துவிடுகின்றன.

நலமான செய்திக்தொடர்பின் பண்புகள்:-

பொதுவாக நலமானச் செய்திதொடர்பின் மூன்று இன்றியமையா பண்புகளை வல்லுநர்கள் குறிப்பிடுவர்: உண்மையானவை, நேரடியானவை, தெளிவானவை.

உண்மையானவை:-

திறந்த மனதோடு, மனதில் இருக்கும் உண்மைகளைப் பொருத்தமாக வெளிப்படுத்திச் செய்தித்தொடர்பு கொள்வது நலமான உறவுகளுக்கு அடிப்படை. உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதலும், உண்மைகளைச் சொல்லாது பொய்களைச் சொல்லி சமாளிப்பதும் அடிப்படை நம்பகத் தன்மையை இழக்கச் செய்யும். அது காலப்போக்கில் உறவுகளைக் கொன்றுவிடும். நம் வாழ்வின் இரகசியங்கள் நம் உரிமைகள், எனவே எல்லாவற்றையும் பகிர்நதுகொள்ளும் கட்டாயம் இல்லை எனினும், பழகும் போது உண்மையாகப் பழகுவதும், நடைமுறையில் தன் தவறுகளாக இருந்தாலும் உண்மைகளை ஏற்றுக்கொள்வதும்,முகமூடி இன்றி உணர்ச்சிகளைப் பகிந்துகொள்வதும் நெருக்கமான அன்புறவுகளுக்கு அச்சாணி. இது ஒருவரை ஒருவர் முழுமையாக ஏற்றுக்கொண்டு, உண்மையானப்பகிர்தலுக்கு மதிப்பும் மரியாதையும் தந்து, தீர்ப்பிடா தன்மையும் கொண்டு செயல்படும் குடும்ப உறுப்பினர்களிடையே தான் சாத்தியம்.

நேரடியானவை:-

செய்தித்தொடர்பு எப்போதுமே நேரடியாக இருப்பது நலமானது. மறைமுகச் செய்தித்தொடர்புகளே பெரும்பாலும் உறவுகளில் குழப்பங்களையும் புரிந்துகொள்ளாத் தன்மையையும் உருவாக்கி, சண்டைச் சச்சரவுகளுக்குக் காரணமாகின்றன. குத்திப் பேசுதல், அடுத்தவர்கள் வழியாக மறைமுகச் செய்தி விடுதல், உளவிளையாட்டுகள் முதலியவை நல்ல உறவுகளுக்கு ஊக்கம் தருபவை அல்ல. அச்சத்தினாலோ அல்லது அடுத்தவரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ மறைமுகத் தொடர்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. எனவே நேரடி செய்திதொடர்புகளுக்கு ஊக்கம் கொடுக்க உணர்ச்சிபூர்வமானப் பாதுகாப்புச் சூழல் குடும்பத்தில் இருப்பது நன்மை பயக்கும்.

தெளிவானவை:-

‘உங்கள் பேச்சு ஆம் என்றால் ஆம் என்றும் இல்லை என்றால் இல்லை என்றும் இருக்கட்டும். மற்றவை அனைத்தும் சாத்தானிடமிருந்து வருபவை’ என்றார் கிறிஸ்து. செய்திதொடர்பு தெளிவானதாக இருக்க வேண்டும் என்பதை இதைவிடத் தெளிவாக ஒருவர் சொல்ல முடியாது. நாம் எல்லா வேளைகளிலும் சிந்தித்துச் செயல்படுவது முக்கியமானது எனின், செய்தித்தொடர்பில் அது இன்றியமையாதது. என்ன செய்தி சொல்ல வேண்டும் என்பதை மனதில் தெளிவாக்கிக்கொண்டு,அதனைப் பொருத்தமான மொழியில் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவது முக்கியம். செய்தி தெளிவாக இருக்க நம் வாழ்மொழியும் உடல்மொழியும் ஒத்துப்போவது முக்கியமானது.

நாம் விடுக்கும் செய்திகளுக்கு நாமே பொறுப்பெடுத்துக்கொள்ளும் விதமாக ‘இது என் உணர்வு, நான் எப்படி நினைக்கிறேன்’ போன்ற வாக்கியங்களை அதிகம் பயன்படுத்துதல் சிறப்பு. சில குடும்பங்களில் தங்களை அறிவாளிகள் என எண்ணிக்கொண்டு, இராஜதந்திரத்தால் தம் குடும்பத்தினரை மேலாண்மை செய்துகொள்ளலாம் என நினைக்கும் மனிதர்கள் உண்டு. அது காலப்போக்கில் பெருந்தோல்வியாகவே முடியும். இராஜதந்திரத்தை மனிதர்களின் உள்ளுணர்ச்சிகள் சீக்கிரமாகக் காட்டிக்கொடுத்துவிடும்.

மேலும், தீர்ப்பிடாதிருத்தல், பிறரை, அவர்களின் தனித்தன்மையை, தனிப்பாணியை மதித்தல் வயதுக்கேற்ப செய்திகளைச் சொல்லுதல்,எப்போதும் அடுத்தவர் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செயல்படுதல் முதலியவை நலமானச் செய்திதொடர்பின் முக்கியப் பண்புகள்.

நலமானச் செய்தித் தொடர்பு வளர சில பரிந்துரைகள்:-

நலமானச் செய்தித்தொடர்பு நடக்கும் சூழல்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுப்பது பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் பொறுப்பு. எப்போதும் வேலைப்பளு உணர்வோடு ‘பிஸி பிஸி’ என இருந்து, குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தான் தற்போதைய குடும்பங்களின் பெருங்குறையாகக் கருதப்படுகிறது.

செய்தித்தொடர்புக்கான நிகழ்வுகளைத் திட்டமிட்டு கொள்வது நல்லது. எடுத்துக்காட்டாக, தினமும் ஒரு வேளை உணவானது குடும்ப உறுப்பினர்கள் யாவரும் சேர்ந்திருந்து உண்ண வேண்டும், என்பது பாசமான நெய்திதொடர்புக்கு அதிக வழி வகுக்கும். பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில்பெரிய ஆடம்பரங்களை விட,குறிப்பிட்ட நபர் தங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதைக் கூறியும் அவரது சிறந்த பங்களிப்பையும், திறமைகளையும் பாராட்டியும், அவர் தங்களோடு இருப்பது எவ்வளவு மகிழ்ச்சி என்பதையும் குறிப்பிட்டு அவரோடு குடும்பமாகச் சேர்ந்து இருந்து உரையாடுதல் பெரும்பலனைத் தரும். அவ்வப்போது ஏற்பாடு செய்யும் குடும்ப சுற்றுலாக்கள் விழா கொண்டாட்டங்கள் சாதனைகளைக் கொண்டாடுதல் ஒரு தோல்வி அல்லது க~;டத்தில் உடனிருத்தல் முதலிய பொழுதுகள் ஆழமானச் செய்தித்; தொடர்புக்கான வாய்ப்புக்கள். செய்தித்தொடர்பினை வளர்ப்பதில் குடும்பமாக இணைந்து விளையாடுதல் மற்றும் நகைச்சவை கொண்டாடுதலுக்கும் நல்ல இடமுண்டு.

தீர்ப்பிடாத மனநிலையும் தன் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடும் சுதந்திர சூழலினையும் மாற்றுக்கருத்துக்களை சொல்லும் அனுமதியும் எல்லா வாழ்வின் எல்லா அம்சங்களைப் பற்றியும் பேசும் பாதுகாப்புச் சூழலும், தன் வாழ்வின் சந்தேகங்கள், நடந்த நிகழ்வுகள், தன் பலவீனங்கள், வெட்கங்கள் முதலியவைகளைத் தயக்கமின்றி பேசும் சூழ்நிலையும் குடும்பத்தில் உருவாக்குவது முக்கியம். இவைகளைப் பகிர்ந்து கொண்ட பின், அதனைச் சுட்டிக்காட்டி பிற்காலங்களில் அவரைத் தாக்கி, மனதைப் புணபடுத்தாத பாதுகாப்பு உத்திரவாதத்தையும் உருவாக்குதல் குடும்பத்தின் பொறுப்பு.

குடும்ப உறுப்பினர்களிடையே மனத்தாங்கலோ அல்லது பிரச்சினைகளோ ஏற்பட்டால், பொருத்தமாக இருந்தால்,குடும்பமாக இணைந்திருந்து தம் சிந்தனைகளையும் உணர்ச்சிகளைஞம் வெளிப்படுத்தி பொருத்தமானத் தீர்வுகளைக் கண்டுகொள்வது குடும்பச் செய்தித்தொடர்பின் சிறந்த சாதனையாக அமையும். பிரச்சினைகள் தீர்வில், பிரச்சினைகளைத் தீர்க்க முயற்ச்சிக்க வேண்டுமே தவிர ஆட்களைத் தீர்த்துக் கட்டிவிடக்கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை ஒரு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், அக்குழந்தையே தோல்வி, அவர் வாழ்க்கையே தோல்வி என்ற நிலைக்கு பேசிவிடக்கூடாது. தோல்வியைத் தற்காலிகத் தடையாகப் பார்க்கவும் எதிர்கால வெற்றிக்குப் படிக்கல்லாக மாற்றவும் கூடிய ஊக்கம் தரும் செய்தித்தொடர்புகளையே மேற்கொள்ளுதல் வேண்டும்.

குடும்பமாக மட்டுமல்ல குடும்பத்தில்; ஒருவருக்கொருவர் நெருக்கமானச் செய்திதொடர்புகள் இருக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். குடும்ப அமைப்பு முறையில் கணவர்-மனைவி உறவுக்குத்; தனியிடம் உண்டு. அந்த தனியுரிமைப் பாதுகாக்கப்பட வேண்;டும். ஆயினும் அப்பா-பிள்ளை, அம்மா-பிள்ளை, உடன்பிறப்புகளுக்குள் பாசம் முதலியவையும் வளர்க்கப்பட வேண்டும். அதற்கேற்பாபோல உள்ள ஆர்வங்களை வளர்க்கவும் செய்தித்தொடர்புகளை ஊக்கப்படுத்தவும் வேண்டும்.

அடிக்கடி பாராட்டுவதும், நேர்நோக்கான உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், அடுத்தவர்களின் தேவையை அவர்கள் சொல்லாமலே அறிந்து, பரிகாரம் தேட முன்வருவதும் அன்பான உறவுகளை இன்னும் வலுப்படுத்தும்.

சிறப்பாக ஊடகங்கள் பயன்படுத்துவது பற்றிய தெளிவான கொள்கைக் குடும்பத்தில் இருக்க வேண்டும. ஊடகங்கள் மகிழ்ச்சிக்கானக் கருவிகள் என்றாலும், நலமானச் செய்தித்தொடர்புக்கும், நல்லுறவுக்கும் தடையாக இருந்து அன்னியத் தன்மையினை உருவாக்கும் காரணங்களாகிவிடக்கூடாது.